உலக அளவிலான பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, பிரபாகரனின் மகள் துவாரகா என்ற பெயரில் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து பயணிப்போம்” என்ற செய்திகளை தாங்கிய அந்த வீடியோ குறித்து பேசப்படும் தகவல்கள் குறித்து பார்க்கலாம்.
பிரபாகரன் மகள் துவாரகா வீடியோ:
தமிழீழம் கோரி இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடந்த உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிராபரகரன் மகள் துவாரகா பெயரில் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட மாவீரர் நாளினை முன்னிட்டு அந்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பிரபாகரன் அவர்களின் மகள் துவாரகா என பேசிய அவர், “எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின், மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். தமிழீழம் அமைவதற்கான ஆயுதப்போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதாகப் பேசியுள்ளார். தமிழீழத்திற்கு போராடி, வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது கடமை என குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்கான போராட்டம் இன்னும் முற்றுபெறவில்லை:
தொடர்ந்து பேசிய அவர், ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தால் தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைக்க வழிபிறக்கும் எனக் கூறிய எந்த நாடும், இதுவரை தமிழீழ மக்களுக்காக உதவவில்லை எனவும்,சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல; எதிராக செயல்பட்டதும் இல்லை எனவும் தமிழீழ மக்களின் பிரச்சனையில் தலையீட்ட சக்தி வாய்ந்த நாடுகள் அரசியல் தீர்வை வழங்கவில்லை; ஐ.நா. போன்ற அமைப்புகளும் நீதியைப் பெற்று தரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிக்கு பிறகு தங்களை சந்திப்பதாகவும், தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் எனவும், சுதந்திரத்திற்கான போராட்டம் இன்னும் முற்றுபெறவில்லை; புறநிலை சூழல்கள் அப்படியேதான் இருக்கின்றன. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு இதுவே காரணங்கள் எனவும் தெரிவித்த துவாரகா, தமது போராட்டம் தொடர்வதாகவும் கூறியதோடு, பிராகரன் கூறியது போல பாதை மாறினாலும் லட்சியம் மாறாது, சத்தியத்தின் சாட்சியாக நின்று மாவீரர்கள் தியாகமும், மக்களின் ஈகங்களும் தேசத்திற்கு வழி காட்டும் அந்த சத்தியத்தின் வழியில் சென்று என்றோ ஒரு நாள் லட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று துவாரகா தெரிவித்தார்.
முன்பே வெளியான தகவல்கள்:
தற்போதைய இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பாகவே தமிழீழ ஆதரவாளர் கவுதமன் இப்படியான வீடியோ வெளியாகும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. “தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிரோடு இருக்கின்றார்” என கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு சந்தரப்பங்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான பழ.நெடுமாறன் கூறி வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக, “இம்முறை, பிரபாகரனின் குடும்பத்தின் அனுமதியுடன் அவர் உயிருடன் இருப்பதாக அறிவிக்கின்றேன்” என அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். மேலும் ஏற்கனவே, தந்தை பெரியார் திக.பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், “பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் தமிழீழ விடுதலைக்காக ஆயுதப்போராட்டமாக இல்லாமல் ஒரு அரசியல் போராட்டம் தொடங்கப்படலாம். அதை மத்திய பாஜக அரசு ஆதரிக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பெரும்பாலும் அதே செய்திகளை தாங்கி வெளியான அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AI தொழில்நுட்பமா?
அதேநேரம், மறுபுறம் வீடியோவில் பேசியது பிரபாகரனின் மகள் தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதோடு, “அது அவர் இல்லை” எனவும் மறுக்கப்படுகிறது. ஏனென்றால், சமீபகாலமாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலமாக, விருப்பப்படும் நபர்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வீடியோக்கள் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. எனவே, இதுவும் அத்தகைய AI வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. துவாராக பெயரில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.