அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனது X தளத்தில் வெளியிட்ட கொசுவர்த்தி சுருள் பதிவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஃபையர் எமோஜி போட்டு ‘நீ விளையாடு நண்பா’ என தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்.” என பேசியிருந்தார்.
அதையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், தான் பேசிய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது கொசுவர்த்தி சுருள் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அது தவிர வேறு எந்த கருத்தையும் அவர் அந்த பதிவில் தெரிவிக்கவில்லை. சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என கூறிய உதயநிதி ஸ்டாலின், தற்போது கொசுவை ஒழிக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியையும், அந்த சமயத்தில் அமைதியாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது எக்ஸ் பக்கத்தில் ‘நீ விளையாடு நண்பா’ என பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலினின் கொசுவர்த்தி சுருள் பதிவுக்கு ஃபையர் எமோஜியும் போட்டுள்ளார்.