Site icon ITamilTv

விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

28 resolutions

28 resolutions

Spread the love

விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1.அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும்.

சாதி, மத மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின் வழிகாட்டும் வழிமுறைகளாகக் கடைப்பிடிக்கப்படும்.

அரசு நிர்வாகம் எப்பொழுதும் முற்போக்குச் சிந்தனையுடனும் அறிவியல் சார்ந்ததாகவும் பன்முகத்தன்மையுடனும் விளங்கும்.

  1. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான ‘நடத்தை விதிமுறைகள் (con- duct rules) வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும்.

3.அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டது போல, மதுரையில் தலைமைச் செயலகக் கிளை அமைக்கப்படும்.

4.சமூக நீதி, மதச்சார்பின்மைக் கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவக் கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாஸ்ரமக் கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

5.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப் பங்கீடு அளிக்கப்படும். சாதி, மதம் மற்றும் மொழிவழிச் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவச் சூழலை வழங்குவதுடன் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன். இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்

6.தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஏற்ற கொள்கை.

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க, உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்

Also Read : வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

  1. தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்.

8.கீழடி மற்றும் கொந்தகை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, பழந்தமிழரின் வைகை நதி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை வழங்கப்படும்.

9.விடுதலை நாள் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, தமிழ் மண்ணில் இருந்து சாதி, மத, இன,மொழி பேதமின்றி. விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் ‘பொதுப் புகழஞ்சலி’ செலுத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும்.

10.மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.

11.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.

12.தமிழக வெற்றிக் கழகத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு கட்சிப் பதவிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, பெண்களுக்கு ஒதுக்கப்படும். படிப்படியாக உயர்த்தப்பட்டு 50 விழுக்காடு என்ற நிலையும் எட்டப்படும்.

13.அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பிற்குத் தனித் துறை உருவாக்கப்படும்.
மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது போல, மாவட்டந்தோறும் மகளிர்க்கான மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் தனியாக அமைக்கப்படும்.

14.மனித குல அழிவிற்கு வழிவகுக்கின்ற, உடல், மன, குண நலனுக்குக் கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும். தீண்டாமை என்பது குற்றம், தீண்டாமையைக் கடைப்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

15.ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட ‘காமராஜர் மாதிரி அரசுப் பள்ளி “(Kamarajar Model Govt school) ஒன்று உருவாக்கப்படும்.

16.உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக்கான தரம் உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறைக்கெனத் தனியாக அரசுப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

17.மாவட்ட அளவில் அரசு பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டு. அங்கேயே போதுமான மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கப்படும்.

18.புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும்.

19.’விவசாயிகளின் விற்பனை விலை’ மற்றும் ‘நுகர்வோர் வாங்கும் விலை இவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, அறிவியல் பூர்வமான முறை நடைமுறைப்படுத்தப்படும்.

20.நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதேபோல, ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் / விவசாய நிலங்கள் மீட்கப்படும். அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும்.

21. தமிழர்களின் மரபுவழித் தொழிலான பனைத்தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டிப்பாலும் வழங்கப்படும். பதநீர், மாநில பானமாக அறிவிக்கப்படும்.

22. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அரசு ஊழியர்கள் வாரமிருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும். பள்ளி மாணவர்கள். மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் சீருடைகள். நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

23. மட்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, அவர்கள் தயாரிக்கும் மண்பாண்டப் பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

24 . தமிழ்நாட்டில் மணல் கொள்ளை. நிலத்தடி நீர்க் கொள்ளை. கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.

25. நகர – கிராம பேதம் களைய, மாநகரங்களில் மக்கள் தொகையைக் குறைக்கவும் மற்ற பகுதிகள் வளர்ச்சி அடையவும், மண்டலவாரியான பகுதிசார் வளர்ச்சிப் பரவலாக்கம் வழியாக மண்டலவாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

26 . தொழிற்சாலைகள் உரிய விதிகளைப் பின்பற்றுவதையும் அவற்றின் கழிவுகள். அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து இருப்பதால் அந்த அமைப்பு சீரமைக்கப்படும்.

27. வனவிலங்குகள், பறவைகள் மற்றும் அழியக்கூடிய அபாய நிலையில் இருக்கும் அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க, வனப் பரப்பளவு அதிகரிக்கப்படும்.

28 . போதைப் பொருள்களை ஒழிக்கச் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும்.


Spread the love
Exit mobile version