தெருநாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவில் முக்கியமான திருத்தங்களை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி, டெல்லி மாநகராட்சி மற்றும் என்எம்டிசி போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை விரைந்து பிடித்து 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்தக் காப்பகங்களில் நாய்களை கையாளக்கூடிய கருத்தடை செய்யத்தெரிந்த நிபுணர்களை காப்பகங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டும் நாய்களை மீண்டும் வெளியே விடக்கூடாது, டெல்லியை தெரு நாய்கள் இல்லாத டெல்லியாக மாற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவு கூறியது.
ஆனால், பிரபலங்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பலர் இதை எதிர்த்து வந்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய குழு இந்த உத்தரவை தளர்த்தியிருக்கிறது.
திருத்தப்பட்ட உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
• தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்தபின் மீண்டும் வெளியே விடலாம்.
• ரேபிஸ் பாதித்த மற்றும் ஆபத்தான வகை நாய்களை வெளியே விட முடியாது.
• பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது.
• நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இந்த முடிவு, தெருநாய்களை பாதுகாப்பதோடு மக்களின் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இனி அதிகாரிகள் நடைமுறையை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதே முக்கிய சவாலாக இருக்கிறது.