திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அத்தொகுதி மத்தியில் திமுகவினரிடையே நிலவி வரும் சூழலில் அம்மாவட்டத்தின் திமுக வழக்கறிஞர் இராம.சேயோனுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.வின் அறிவுசார் முகமாகத் திகழும் அட்வகேட் இராம. சேயோன், மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு இணையாக வேட்பாளர் தேர்வு குறித்த விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, காவிரி டெல்டாவின் முக்கியத் தொகுதியான மயிலாடுதுறையில் இந்த முறை தி.மு.க. நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மயிலாடுதுறை தொகுதி பாரம்பரியமாக தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றம் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் வசம் உள்ள இத்தொகுதியில், காங். எம்.பி. ஆக சுதா இருக்கிறார். இம்முறை தி.மு.க.வே நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உடன்பிறப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தி.மு.க. நேரடியாகப் போட்டியிடும் பட்சத்தில், தலைமை பரிசீலிக்கும் முக்கியப் பெயர்களில் மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞரும், தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளருமான இராம. சேயோன் (Adv. Rama Seyon) முதலிடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. திராவிட கழகத்தின் கொள்கைகளை சட்ட ரீதியாக நிலைநிறுத்துவதில் வல்லவர் என்பதால் மயிலாடுதுறையின் சட்டப் போர்வாள் என்ற அடையாளத்தோடு வலம் வருகிறார்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவானபோது, அதற்கான வருவாய் மற்றும் மாவட்ட நீதிமன்றக் கட்டமைப்புகள் அமையத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாதிக்கப்படும் தி.மு.க தொண்டர்களுக்கு சட்ட ரீதியாக துணையாக நிற்பதுடன், எளிய மக்களுக்கு இலவசச் சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். சர்ச்சை இல்லாத Clean & Professional பிம்பம் மற்றும் அனைத்து சமூக மக்களுடனும் கொண்டுள்ள இணக்கமான உறவு இவருக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

சட்டமன்றத்திற்குப் படித்த சட்ட வல்லுநர்கள் தேவை என்ற தற்போதைய அரசியல் சூழலில், படித்த வேட்பாளாராக இராம. சேயோன் முன்னிறுத்தப்படுகிறார். இவர் தவிர குத்தாலம் அன்பழகன், அருள்செல்வம் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், தி.மு.க தலைமையின் நம்பிக்கைக்குரியவராகவும், அரசு வழக்கறிஞராக நிர்வாக அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால் இராம. சேயோனுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தின் சமூக-அரசியல் கட்டுமானத்தின் முக்கியத் தூணாக விளங்கும் இராம. சேயோனை தி.மு.க வேட்பாளராக நிறுத்தினால், எவ்வித எதிர்ப்புமின்றி வெற்றியை உறுதி செய்ய முடியும் என்பதே தொகுதி மக்களின் கணிப்பாக உள்ளது.
