தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார் முதலமைச்சர் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தவெக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
முதலமைச்சராக பதவியேற்றதும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவர் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டிற்கான முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியையும் சந்திக்கலாம் என கூறப்படுகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் விஜய் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
