Tamilnadu

ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? இது பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால்!

மதுரை மத்திய தொகுதி NDA கூட்டணி வேட்பாளராக நடிகர் சுந்தர் சி, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகன் எனத் தன்னை அறிமுகப்படுத்திய அவர், அவர் உருவாக்கிய கட்சியை ஜெயலலிதா வழிநடத்தி, தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாதுகாக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார். அந்த இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

திரைப்படங்களில் பேய் கதைகள், பெரிய கூட்டங்கள், வசூல் சாதனைகள் என பலவற்றை காட்டியுள்ளேன் என்ற அவர், இன்றுதான் உண்மையான பேய் கூட்டம் என்ன என்பதை இந்த மக்களின் பெரும் திரளில் பார்க்கிறேன் எனக் கூறினார்.

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலத்தில், உலகம் சுற்றும் வாலிபன்’
திரைப்படத்திற்கு அப்போதைய அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது என்றும், ஆனால் அந்த நேரத்தில் ரசிகர்கள் செயல்வீரர்களாக மாறி அவருக்கு உறுதுணையாக இருந்ததால் அவர் வெற்றி பெற்றார் என்றும் நினைவுகூர்ந்தார். அதுபோன்ற செயல்வீரர்களால்தான் அதிமுக தொடர்ந்து இயங்கி வருகிறது என்றார்.

தான் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தவுடன், இந்த தொகுதியிலா? என்று எதிர்ப்பு எழுந்ததாக குறிப்பிட்ட அவர், ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? இது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தான். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கை பார்த்துவிடலாம் என சவால் விடுத்தார்.

திமுக கூட்டணியை விமர்சித்த அவர், அவர்களிடம் பில்டிங் மட்டும் தான் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் எனக் கூறினார். நான் வெளியூரிலிருந்து வந்தவன் என்று கூறுகிறார்கள்; உள்ளூரில் இருந்தவர்கள் என்ன சாதித்தார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், இந்த பகுதி மக்கள் தங்களது எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நான் கறிக்கடைகளை மூடுவேன் என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். நான் ஒரு வாரத்தில் ஆறு நாள் கறிசோறு சாப்பிடும் மனிதன். நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு கறி விருந்து அளிப்பேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *