ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய முகங்களாக அறியப்பட்ட ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு மொத்தம் 10 எம்.பி.க்கள் இருந்த நிலையில், அதில் 7 பேர் விலகியதால் தற்போது அக்கட்சியின் பலம் 3 எம்.பி.க்களாக குறைந்துள்ளது.
இவர்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் பாஜகவின் பலம் மாநிலங்களவையில் 113 எம்.பி.க்களாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 148 ஆகவும் உயர்ந்துள்ளது.
புதிய உறுப்பினர்களை வரவேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், விலகிய 7 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனால், அரசியலமைப்பு விதிகளின் படி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் விலகினால் அது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் வராது என்பதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
