வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹெச்.ராஜா, கடந்த 7-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக சென்னை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா பேட்டி அளித்ததாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின்கீழ் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
தேசத்தை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பேசிய கொடுங்குற்றம் செய்தவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, தேசத்துக்காக குரல் கொடுத்த ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது’ என தெரிவித்துள்ளார்.