ஜம்மு காஷ்மீரில் நாடக நடிகை அம்பிரீன் பட் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாடக நடிகை அம்பிரீன் உயிரிழந்த நிலையில் அவருடன் இருந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி தீவிரவாதிகளின் துப்பாக்கிசூடு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. ராணுவ வாகனங்கள் மீது பொது மக்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் நாடக நடிகை அம்பிரீன் பட் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாடக நடிகை அம்பிரீன் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியில் டி.வி. நாடக நடிகை அம்பிரீன் பட் வீடு உள்ளது. இந்நிலையில், நடிகை அம்பிரீனின் வீட்டிற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். அம்பிரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த நடிகை அம்பிரீன் மற்றும் 10 வயது சிறுமி இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அம்பிரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கி குண்டு காயத்தால் படுகாயமடைந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர். நடிகை வீடுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.