ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், நிகழ்வை சீர்குலைக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட பல நகரங்களில் கொடி ஏற்று விழா நடத்தப்பட்டது. இந்தியக் கொடி ஏற்றப்பட்டபோது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் குழுக்களாக எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். பிரிவினை சார்ந்த பேனர்கள் மற்றும் கொடிகள் ஏந்தி, நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர்.
இது குறித்து தி ஆஸ்திரேலியா டுடே வெளியிட்ட காணொளி:
இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், கலவரம் ஏற்படாமல் தடுக்க அமைதியை பேணி, இந்திய தேசிய கீதத்தை முழக்கி, விழாவை நிறைவு செய்தனர். உள்ளூர் போலீசார் உடனடியாக பாதுகாப்பு வளையத்தை அமைத்து, சம்பவ இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இது குறித்து “சுதந்திர தினம் என்பது உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் பெருமை நாளாகும். இதனை கெடுக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது” என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.
