சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; தற்போது நடைமுறையில் உள்ள விதிகளே தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புறங்களில் இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே குறைந்தது 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். கிராமப்புறங்களில், இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே குறைந்தது 45 நாட்கள் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என விவரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் முன்கூட்டியே சிலிண்டர்களைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும், தேவைப்படும் அளவு எல்பிஜி கையிருப்பு போதுமானதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக பரவும் செய்திகளும் அடிப்படையற்றவை என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதுடன், விநியோகச் சங்கிலி தடையின்றி இயல்பாக செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வதந்திகளை நம்பி எரிபொருள் நிலையங்களில் கூட்டமாக குவிய வேண்டாம் என்றும், எப்போதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
