கோவில்பட்டியில் சொத்து பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் சொத்து பிரச்னை காரணமாக, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கோவில்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி மகனும், மனைவியும் கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.
அங்கு வந்த வேலாயுத பெருமாளுக்கும் மகன் ராமச்சந்திரன், மனைவி முத்துமாரி 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றவே மகனும், மனைவியும் வேலாயுத பெருமாளை தாக்கி உள்ளனர். ஆத்திரமடைந்த வேலாயுத பெருமாள், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகன் மற்றும் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
Also Read : அமெரிக்காவை நடுநடுங்க வைத்த இரட்டைக் கோபுர தாக்குதல் தினம் இன்று..!!
இச்சம்பவம் அறிந்து பேருந்து நிலையத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு முதற்கட்ட சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு இருவரும் மாற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், வேலாயுத பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தந்தை பெயரில் இருந்த 16 சென்ட் இடத்தை, மகன் பெயருக்கு மாற்றி தரக்கூறி குடும்பத்திற்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி மற்றும் மகனை வேலாயுத பெருமாள் கொல்ல முயற்சி செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
சொத்துப் பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை சரமாரியாக தந்தை வெட்டிய சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.