அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு(senthil balaji) ஜாமீன் கோரி தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் (இருதய) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்,புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போதும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் , செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கும் குழு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜாமீன் கோரி தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.