போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தற்போது சிறையில் (NCB) இருக்கும் நிலையில் அவருடனான தொடர்பு பற்றி விளக்கமளிக்க புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரனுக்கு NCB சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டிருந்தனர்
இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் ஜாபர் சாதிக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வட மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது சக கூட்டாளியான சதானந்தத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை தற்போது டெல்லியில் உள்ள சிறையில் அடிக்கப்பட்டு அவரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக்குடன் நட்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த வேண்டுமென NCB அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக இயக்குநர் அமீர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இப்படி இருக்கும் சூழலில் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு பற்றி விளக்கமளிக்க புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரனுக்கு NCB சம்மன் அனுப்பி உள்ளது .
ஈரம் அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் வரும் 14, 15ஆம் தேதி டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில் ஏற்கனவே (NCB) இயக்குநர் அமீரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி காங். பொறுப்பாளரான ராஜேந்திரன், சாதிக் உடன் இருந்த படங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.