ITamilTv

முன் ஜாமீன் மனு தள்ளுபடி; பெலிக்ஸ் மனைவி முதல்வர் தனிப்பிரிவில் புகார்

felix and wife

Spread the love

சவுக்கு சங்கரின் பேட்டியை வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெண் போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அநாகரிகமாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் சேனல் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டையும் கைது செய்ய வேண்டும் என்றும் மதுரை நீதிமன்றத்தில் நடந்த வழக்கின்போது நீதிபதி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பெலிக்ஸ் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் டெல்லியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, புகாரின் பேரில் திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது விவகாரம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் அளித்தவர்கள், பெலிக்ஸை ரயிலில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் திருச்சி சைபர் க்ரைம் போலீசில் ஒப்படைத்த பின்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, நம்மைப் போன்ற பத்திரிகைக்காரங்கள் எல்லோருக்கும் இதே நிலைமை திரும்பும்… அதனால அத மட்டும் மனசுல வச்சிக்கங்க… என்று கதறினார்.

இதன்பின்னர் பெலிக்ஸின் வீட்டில் போலீசார் சோதனையிட முயன்றதையும் அது குறித்து அவரது மனைவி கேள்வி கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பெலிக்ஸ் கைதுக்கு முன்னதாக, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (மே16) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனவே அவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து , பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுவிட்டதால், அவரின் முன் ஜாமீன் மனு காலாவதியாகி விட்டது என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி சக்திவேல், தள்ளுபடி செய்தார்.

இதனிடையே பெலிக்ஸின் மனைவி, ஜோன், கணவர் மீதான கைது நடவடிக்கை குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், காவல்துறை தரப்பில் பெலிக்ஸுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், விசாரணை என்ற பெயரில் தங்களை காவல்துறை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

நடந்த சம்பவத்துக்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டோம். எனவே எவ்வித இடையூறையும் எங்களுக்கு ஏற்படுத்தக்கூடாது” என்றும் மனுவில் கூறியுள்ளார்.’

இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் – புட்டு புட்டு வைத்த ஓபிஎஸ்


Spread the love
Exit mobile version