ITamilTv

” நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்..” பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!!

Spread the love

2001 நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் (2001ParliamentAttack) உயிரிழந்த 9 பணியாளர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் துணை குடியரசுத் தலைவர் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சுமார் 30 நிமிடங்கள் மேலாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தின் போது மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதை அடுத்து, நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி உள்பட பலரும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Spread the love
Exit mobile version