ITamilTv

கோடையால் வற்றும் நீர்நிலைகள்-காலிக் குடங்களோடு பொதுமக்கள் மறியல் – முதல்வருக்கு சுற்றுலா பயணம் தேவையா?

stalin 01

Spread the love

தமிழகத்தில் தகதகக்கும் சூரியனால், வெப்ப அலை அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் 15 இடங்களில் வெயிலின் அளவு சதம் அடித்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 109 டிகிரியை தொட்டிருக்கிறது.
திருப்பத்தூரில் 107 புள்ளி 6 டிகிரி பாரன்ஹீட்டும் சென்னை மீனம்பாக்கத்தில் 100 புள்ளி பூஜ்யம் 4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

மே மாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் ,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சூரியனின் நெருப்புக் கரங்களின் உக்கிரம் அதிகரிப்பால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே நேர்த்திக்கடன் செலுத்த மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற ஹர்ஷன் என்னும் 14வயது சிறுவன் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளான்.

சென்னை மாதவரத்தில் சைக்கிளில் சென்ற முதியவர் வெயிலில்ன் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வேலூரிலும் வெயிலின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவிலும் தேர்தலின்போது பல்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்தவர்கள் 7 பேர் உள்பட 10 பேர் கடும் வெப்பத்தால் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளனர்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுலாப் பயணிகள் குவியும் நிலையில் ஊட்டியில் பகல்நேர வெப்பநிலை 29 டிகிரி அளவில் இருப்பது சுற்றுலாப்பயணிகளை சோர்வடைய வைத்துள்ளது.

கோடைவெயில் தாக்கத்தால் ஒகேனக்கல்லில் நீர் வரத்தின்றி காவிரி ஆறு காய்ந்து போய் கிடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகளின் நிலையும் இதுதான்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
இதே போல் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசியும் வானம் பிளந்து கொட்டிய மழையால் வெள்ளக்காடானது.
வீடு, வாசல், தோட்டங்கள், விளை நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாகி மக்களின் வாழ்வாதாரமே சீர்குலைந்து போனது.
மழை நீரை சேமிக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், அவை வீணாக கடலில் போய் கலந்தது.
ஒருபுறம் கொட்டித்தீர்த்த மழைநீரை சேமிக்காமல் விட்டுவிட்டு, இன்று கொளுத்தும் வெயிலின் காரணமாக இருக்கின்ற நீர்நிலைகளும் வறண்டு தமிழகமே தாகத்தில் தவிக்கத் தொடங்கி இருக்கிறது.
குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் இப்போதே காலி குடங்களோடு போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இருதினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாயை குடிநீர் விநியோகப் பணிகளுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுவிட்டு, அவர் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டார்.
கடந்த மழைவெள்ளத்தின் போது கூட்டணி விஷயமாகப் பேச டெல்லிக்கு சென்றார்…
இன்று கோடை தொடங்கி தண்ணீருக்காக மக்கள் தவிக்கும்போது கொடைக்கானலுக்கு குளுகுளு பயணம் செல்வதா ?
என்று முதல்வரின் பயணம் குறித்து அதிருப்தி குரல் எழுப்பி இருக்கிறார் வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

இதனிடையே ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே நீர் மிச்சம் இருப்பதாகவும்
1௦ ஆண்டுகள் காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் விடுத்துள்ள எச்சரிக்கை இன்னும் அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
ஆனால், இதனால் சென்னை பாதிக்காது என்று சொல்கிறார்கள் குடிநீர் வாரியம் தரப்பில்.
‘‘தற்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு செப்டம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும்.
மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மீஞ்சூர், நெம்மேலியில் தினமும் 210 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.
இந்த ஆண்டு நெம்மேலியில் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 150 மி. லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.
எனவே இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது’’ என்கிறார்கள் அவர்கள்.
அதுசரி… தமிழகம் என்பது சென்னை மட்டுமல்ல…
கோடையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தண்ணீர் விநியோகம் சரிவர நடக்க வேண்டும்…
குடிநீர் பிரச்சனையே இருக்கக்கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோடையில் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமையுங்கள் என்று அரசிய தலைவர்கள் உத்தரவிடுவதும், ஒருநாள் கூத்தாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வில் போய் பங்கேற்று போட்டோ சூட் எடுப்பதும் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டி விடாது.
இயற்கை வளங்களை அழியாமல் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இனி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு வலியுறுத்தவும், அரசுக்கு கரம் கொடுக்கவும் முன் நிற்க வேண்டும்.


Spread the love
Exit mobile version