ITamilTv

முகநூலில் பழகி ஆசை தூண்டில்…. சிக்கியவர்களிடம் நகை பணம் பறிப்பு -பெண் உள்பட 5 பேர் கும்பல் கைது

facebook cheating 02

Spread the love

முகநூலில் பழகி தொழிலதிபர்களுக்கு ஆசைவலை விரித்து, அவர்களை நேரில் வரவழைத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

முகநூல் புரொபைலில் பெண்ணின் படம் இருந்துவிட்டால் போதும், அவரைத் தெரியுமோ தெரியாதோ உடனடியாக நட்பு அழைப்பு கொடுப்பது என்பது பலருக்கும் வாடிக்கையான ஒன்று.
ஆனால் பெண் ஒருவரே இப்படி நட்பு அழைப்பு கொடுத்துவிட்டால், என்ன ஏதென்று பார்க்காமல் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டு அவருடன் கடலை போடத் தொடங்கி விடுவார்கள்.
அப்படி தனக்கு வந்த பெண்ணின் முகநூல் அழைப்புக்கு பதில் அளித்து அவரோடு பழகி வம்பில் சிக்கி இருக்கிறார் சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
அவரை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்ட தில்லாலங்கடி பெண் தன் சகாக்களோடு சிக்கி இருக்கிறார்.

திருநெல்வேலி மாநகர கமிஷனர் மூர்த்தியின் செல்போனில் பேசிய நபர், தனது நண்பரான சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் நித்தியானந்தம் என்பவரை, ஒரு கும்பல் காரில் கடத்திச் செல்வதாகக் கூறி, அவரை காப்பாற்றும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில் பெருமாள்புரம் எஸ்.ஐ.அருணாச்சலம் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 30 நிமிடங்களில் அந்த ஆள்கடத்தல் கும்பலை காருடன் மடக்கினர்.
அதில் இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வெள்ளத்துரை (42), பார்த்தசாரதி (46), சுடலை (40), ரஞ்சித் (42), பானுமதி (40) என்பது தெரியவந்தது.
மேலும் இந்த கடத்தலுக்கு பின்னணி தொழிலதிபருடன், பானுமதி ஏற்படுத்திய முகநூல் நட்பு தான் என்பதும் தெரியவந்தது.
ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சூரிய நாராயணன் என்பவரின் மனைவிதான் இந்த பானுமதி.
குடும்பத் தகராறில் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து திருநெல்வேலி பெருமாள்புரம், என்.ஜி.ஓ., சி காலனியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: எங்க கஷ்டடியில உங்க பசங்க….போலீஸ் பெயரில் மிரட்டல்…டிரெண்டிங்காகும் புது மோசடி

முகநூலில் தொழிலதிபர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் பானுமதி, அவர்களை தனிமையில் சந்திக்கலாம் என்று திருநெல்வேலி வீட்டுக்கு வருமாறு ஆசைத்தூண்டில் போடுவாராம்.
அப்படி. வருபவர்களை ஏமாற்றி மிரட்டி பணம் நகை பறிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சேலம் அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம்( 47) என்பவருடன் பானுமதி முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி உள்ளார்.
தொழிலதிபரான நித்தியானந்தம் காற்றாலை நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
வழக்கம்போல பானுமதி ஆசைத் தூண்டில் வீசி திருநெல்வேலி வீட்டுக்கு நித்தியானந்தத்தை வரவழைத்துள்ளார்.
அதன்படி நெல்லைக்கு வந்த நித்தியானந்தம், பானுமதியுடன் தனி அறையில் இருந்துள்ளார்.
அப்போது ஏற்கனவே பானுமதியின் திட்டப்படி வெள்ளத்துரை உள்ளிட்ட 4 பேரு அறைக்குள் நுழைந்து நித்தியானந்தத்தை மிரட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: வெப்ப அலை : இன்று 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!

அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயின், ஒரு பவுன் தங்க மோதிரத்தையும் பறித்தனர்.
மேலும் கிரெடிட் கார்டு, ஜீபே மூலம் ரூ.75 ஆயிரமும், ஏ.டி.எம் மூலம் ரூ.60 ஆயிரமும் பறித்துக் கொண்டனர்.
மறுநாள், அவரது செக்கில் கையெழுத்து பெற்று பொன்னாக்குடி அருகே வங்கிக்கு காரில் அழைத்துச் சென்று ரூ.10 லட்சம் பணம் எடுத்தனர்.
அன்று மாலையில் நித்தியானந்ததத்தை காரில் அழைத்துச் சென்றபோதுதான் அவரது நண்பர் மூலமாக கடத்தல் தகவல் தெரிந்து அவர்கள் பிடிபட்டுள்ளனர்.
விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்த நிலையில், தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் , நகை பறித்து வந்த பானுமதி உள்பட ஐவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்.


Spread the love
Exit mobile version