ITamilTv

ஆபரேஷன் அஜய் : இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்கள் டெல்லி வருகை..!!

Spread the love

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4வது விமானம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையான போர் நீடித்து வரும் நிலையில், இந்த யுத்தத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

பாலஸ்தீனர்களின் தாயகத்தை பிரித்து உருவாக்கப்பட்டது தான் இஸ்ரேல். தனிநாடு உருவாக்கப்பட்ட இஸ்ரேல், காலப்போக்கில் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் சொந்தமாகியது.

இதனால் பாலஸ்தீனர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஜிஹாதிகள் மிகப் பெரும் தாக்குதலை நடத்தினர். இதில் இஸ்ரேலில் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது . இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரை பகுதிகளில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போரில் இஸ்ரேலில் சிக்கி உள்ள சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4வது விமானம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது; மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மேலும் 274 இந்தியர்கள் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர் .

இஸ்ரேலில் நிலவி வரும் போர் தாக்குதல் காரணமாக இதுவரை 918 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version