Parliamentary Elections : இன்னும் இரு தினங்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை விசயங்களில் இதுவரை சுனக்கம் காட்டி வந்த பாஜக, கடந்த சில தினங்களாக டாப் கியரில் வேகமெடுத்துள்ளது.
ஏற்கனவே, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது பாஜக. தவிர, ‘பாஜக கூட்டணியில் போட்டியிடுவோம்’ என அறிவித்த நடிகர் சரத்குமார், தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியையே நேற்று (12.03.2024) அதனோடு இணைத்து விட்டார்.
அதே போல, பாமகவுடனும் கூட்டணியை உறுதி செய்து விடுவதில் மும்முரமாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, அதன் தோழமைக் கட்சிகளான ஓ.பி.எஸ். அணி மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகியவற்றையும் தன் கூட்டணியில் உறுதி செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து சென்னை வந்திருந்த பாஜக மேலிடத் தலைவர்களான விகே.சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் தாங்கள் தங்கியிருக்கும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்தே ஓ.பி.எஸ். அணியினருடன் முதற்கட்ட பேச்சு வார்த்தையை முடித்திருந்தனர்.
அதற்கு அடுத்த நாள் திருச்சியில் வைத்து டிடிவி தினகரனுடன் பாஜக தேர்தல் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி அம்முகவுடன் தங்கள் கூட்டணியை உறுதி செய்தனர்.
அந்த 2 கட்சிகளோடும் நடந்த முதற்கட்ட பேச்சு வார்த்தையின் போது, ‘தாங்கள் போட்டியிட விரும்பும்தொகுதிகள் இவைதான்’ என டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் தனித்தனியாக பாஜக குழுவிடம் லிஸ்ட் கொடுத்திருந்தனர்.
அந்த பட்டியலில், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கோவை ஆகிய 10 தொகுதிகள் ஓ.பி.எஸ்.சின் விருப்ப பட்டியலில் இருந்ததாகவும்,
ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தென்சென்னை, வேலூர், நீலகிரி, நாகப்பட்டிணம், விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 10 பாராளுமன்ற தொகுதிகள் டிடிவி தினகரனின் விருப்பப் பட்டியலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில்தான், அந்த இருவரோடும் நேற்று இரவு மீண்டும் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் சுமூகமாக பேசி முடிக்கப் பட்டதாக தெரிவிக்கின்றன தகவல்கள்.
அப்போது நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., டிடிவி ஆகிய இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வீதம் மொத்தம் 8 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 4 தொகுதிகளை தலா 2 தொகுதிகள் வீதம் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இரு கட்சிகளும் போட்டியிட விருக்கும் மொத்த தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்றோ அல்லது நாளையோ,
பாஜகவுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்படும் நிலையில், ஓ.பி.எஸ். மற்றும் டிடிவி ஆகிய இரு தரப்புக்கும் நெருக்கமாக இருக்கும் சிலரிடம் பேசினோம்.
“ஆரம்பத்தில், இருவருக்குமே தலா 6 தொகுதிகள் வீதம் 12 பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியிருந்தார்கள். அப்படி ஒதுக்கப்பட்டால், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ். அணி 3 தொகுதிகளிலும், அமமுக 3 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என முடிவு செய்திருந்தார்கள்.
கொங்கு மற்றும் சென்னை உட்பட மாவட்டங்களில் உள்ள இதர 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும், தென் மண்டலத்தில் வெற்றியை உறுதி செய்து விடலாம் என்பதே இருவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
தற்போது, ஆளுக்கு 4 தொகுதிகள் என்பது ஏமாற்றமான முடிவாக இருந்தாலும், இருவருக்கும் சேர்த்தே மொத்தம் 7 தொகுதிகள் தான் ஒதுக்க முடிவும் என பாஜக தரப்பில் முடிவு செய்திருப்பதாகவும் சில தகவல்கள் வருகின்றன. ‘இப்போதைக்கு வேறு வழி இல்லை’ என அமைதியாக இருக்கின்றனர்.
இந்த தேர்தலின் Parliamentary Elections முக்கிய நோக்கமே வெற்றி என்பதற்கும் மேலாக எடப்பாடி அணியினருக்கு படு தோல்வியை தர வேண்டும் என்பதுதான்” என்றனர் அவர்கள்.