புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இணைந்த என்.டி.ஏ கூட்டணியும், காங்கிரஸ் – திமுக கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகமும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்த சூழலில், என்.டி.ஏ கூட்டணிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதுச்சேரி சென்றார்.
அங்கு ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் ராமலிங்கத்திற்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்து ஆலோசனைகள் நடத்தி, விரைவில் பட்டியல் வெளியாகும் என தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்த அண்ணாமலைக்கு அவசரமாக சென்னை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, அவர் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக சென்னை திரும்பி, பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த திடீர் அழைப்பு மற்றும் அண்ணாமலையின் வருகை, அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
