கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, அரசு தலைமை கொறடா & வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்து தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தி.மு.க தேர்தல் அறிக்கை : NEET முதல் GST வரை..அசத்தலான வாக்குறுதிகள்!
தமிழக தேர்தல்:
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டு கால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.அதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது .
தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு:
அதனை தொடர்ந்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ,”தங்கை கனிமொழியை தலைமையிலான எங்கள் குழு மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கும், அதனுடைய தலைவர் கனிமொழி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தலைமைக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது மிக முக்கியமான தேர்தலின் ஒரு மிக முக்கிய அங்கமாகப் பகுதியாக எப்பொழுதுமே இருந்திருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் தொட்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை என்பது மக்களுடைய ஒரு தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்று அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் நம்முடைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த தேர்தல் அறிக்கையை இவ்வளவு பாரம்பரியம் இருக்கக்கூடிய இந்த திராவிட இயக்கத்தின் தேர்தல் அறிக்கையை உருவாக்கக்கூடிய பொறுப்பை அந்த குழுவின் தலைமையை என்னிடம் ஒப்படைத்தற்கு, என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்த தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடிய அதனைப் பேருக்கும், இந்த குழுவில் தொடர்ந்து இந்த அறிக்கை சிறப்பாக வரவேண்டும் என்று தன் கருத்துக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டே இருக்கக்கூடிய குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட கழக செயலாளர்களுக்கும், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் இந்த அறிக்கை எப்படி வருகிறது என்று தொடர்ந்து எங்களை கண்காணித்து, வழிகாட்டி இந்த தேர்தல் அறிக்கை இன்று வெளிவருவதற்கு காரணமாக இருக்கக்கூடிய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் தொடர்ந்து பெருமையாகச் சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. அந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர். நம்முடைய பெரியவர்கள் பெரிய பெரிய விஷயங்களை செயற்கரிய செயல்களை செய்வார்கள் என்று நாம் எப்பொழுதுமே சொல்லுவோம். இந்த தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க பொழுதுதான், நம்முடைய ஆட்சி நம்மளுடைய முதலமைச்சர் அவர்களுடைய ஆட்சி இந்த குறுகிய காலத்திற்குள் எத்தனை சாதனைகளை செய்து இருக்கிறது என்று அந்த பட்டியலைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.
தேர்தல் அறிக்கை நம்முடைய சாதனைகளை எல்லாம் போட்டோம் என்றால் அது சரியா போயிடும். பல சாதனைகளை குறைக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் பார்த்தோம். ஒவ்வொருவரையும் தொடக்கூடிய ஒரு ஆட்சியாக, ஒவ்வொருவரும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பேருடைய வாழ்க்கை மாற்றக்கூடிய, உயர்த்தக்கூடிய ஒரு ஆட்சியாக நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய நல்ல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியிலே இந்த தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு அடுத்து இந்த நல்லாட்சியை இந்த திராவிட இயக்கத்தின் ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொண்டு போவதற்கு வரக்கூடிய தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டிலே உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது. அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய குழுவின் சார்பில் உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நிச்சயமாக வரக்கூடிய தேர்தலிலே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 மட்டும் இல்லை இந்த நாடும் நமது ஆக இருக்கும் என்று பேசினார்.