ITamilTv

தென்சென்னையை வலம் வரும் ஒரே ஒரு குருக்கள்! – ஜெயவர்தன்

jayavardhan

Spread the love

கூட்டணி இன்னும் முடிவாகவில்லை… அதனால் இன்னின்ன தொகுதிகளில்தான் போட்டி என்று இதுவரை அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும் ஒரே ஒரு குருக்கள் வருகிறார்… வழிவிடுங்கோ என்பது போல, ஒரு தொகுதியை குறிவைத்து தனி ஆவர்த்தனம் காட்டி வருகிறார் அதிமுக டாக்டர் ஒருவர். அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன்.

நான் வாரிசு அரசியலுக்கு தொடர்புடையவன் அல்ல… அம்மாவே என்னை நேரில் அழைத்து தென் சென்னை தொகுதியைக் கொடுத்தார்கள். எனக்கு பெயர் வைத்தவர்கள் அவர்கள்தான்… எனது திருமணத்தை நடத்தி வைத்ததும் அம்மாதான். அந்த இதய தெய்வம்தான் என்னை நேரில் வரவழைத்து தென் சென்னை தொகுதியில் 2014ஆம் ஆண்டு போட்டியிடச் செய்தார்கள் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார் ஜெயவர்தன்.

2014ல் நடந்த 16வது மக்களவைத் தேர்தலில் முதன்முதலில் களம் கண்ட மருத்துவர் ஜெயவர்தன், 4 லட்சத்து 38 ஆயிரத்து 404 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன் மூன்றரை லட்சம் வாக்குகளும், பாஜகவின் இல. கணேசன் இரண்டரை லட்சம் வாக்குகளும் பெற்றனர்.

இதையும் படிங்க: திருச்சி மாநகரில் முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கும் எடப்பாடி பழனிசாமி..!!

முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தொகுதியில் ஆக்டிவ்வாக இருந்த ஜெயவர்தன், அவரது மறைவுக்குப் பின்னர் கட்சியின்சீனியர்களோடு சேர்ந்து வலம் வந்ததோடு சரி. தொகுதிக்கு பெரிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்னும் குமுறலும் பொதுமக்கள் மத்தியில் இருந்துதான் வந்தது.

இந்த நிலையில்தான் 2019 தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் மீண்டும் களம் கண்டவரை, திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி கொண்டார். தமிழச்சி தங்கபாண்டியன் 5லட்சத்து 64ஆயிரத்து 872 வாக்குகளைப் பெற்றார்.
2014 தேர்தலில் 4லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெயவர்தனால், 2019 தேர்தலில் 3 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இத்தனைக்கும் 2014 தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்ற பா.ஜ.கவும் இவர்களுடன் கூட்டணியில் இருந்தது. அந்த வாக்குகள் கிடைத்திருந்தால் கூட ஜெயவர்தன் வெற்றிபெற்றிருக்க முடியும்.

ஆனால் அந்த தோல்விக்குப் பின்னர்தான் ஜெயவர்தனை அடிக்கடி தொகுதி பக்கம் பார்க்கமுடிகிறது என்கிறார்கள் அதிமுகவினரே… அதற்கு காரணம் மீண்டும் தென் சென்னையைத்தான் ஜெயவர்தன் குறி வைத்துள்ளார். அதனை சமீபத்திய அவரது எக்ஸ் தள வீடியோக்களும் உறுதிப்படுத்தி வருகிறது.

அதிமுகவில் இன்னும் தொகுதி எதுவும் முடிவு செய்யப்படாத நிலையிலும், தென்சென்னையில்தான் போட்டியிடுவேன் என்று அடம்பிடித்தபடி சுற்றி வருகிறாராம் ஜெயவர்தன். கடந்த சில நாட்களாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நம் தென்சென்னை தொகுதிக்கும் மக்களுக்கும் செய்த துரோகங்கள் என்னும் ஹாஸ்டேக்கிட்டு வரிசையாக வீடியோ பதிவினை வெளியிட்டு வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு திறன் மேம்பாட்டு மையம் கூட நம் தென்சென்னைக்கு திமுக எம்பி கொண்டு வரவில்லை! இதனால் நம் தொகுதியில் பெரிதளவில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி இருப்பது வேதனைக்குரியது.
ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி இருக்கும் நம் தென்சென்னை தொகுதியின் இரயில் நிலையங்கள்!
பொழுதுபோக்கு பூங்கா ஒன்றும் வேண்டாம்!

பெருங்குடி குப்பைகள் அகற்றப்பட்டு மீண்டும் சதுப்பு நிலமாகவே மாற்றப்பட வேண்டும்!இந்த விடியா அரசு இயற்கையையும் மக்களையும் மீறி ஒரு செங்கல் கூட அங்கு வைக்க முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


நம் தென்சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தது அஇஅதிமுகஆனால் கடந்த 5 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக எந்தவித குரலும் எழுப்பாதவர் தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்!
என்றெல்லாம் மைக் மோகன் மாதிரி பேசியபடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

ஜெயவர்தனின் இந்த முயற்சிகளுக்கு கைமேல் பலன் இருக்கும் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. காரணம், 2014ல் ஜெயவர்தன் இருந்தது போலவே, 2019ல் வென்ற தமிழச்சி தங்கபாண்டியனும் நடந்து கொள்வதால்தான் என்கிறார்கள். அதுமட்டுமின்றி திமுகவில் மீண்டும் அவருக்கு சீட் கொடுப்பதும் கஷ்டம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்…

ஆக ஒரே ஒரு குருக்கள் வருகிறார் வழியை விடுங்கோ என்பது போல ஜெயவர்தனின் முயற்சிக்கு அதிமுக தலைமை அவருக்கு சீட் கொடுக்க வேண்டும்… மக்களும் வாக்களிக்க வேண்டும்… பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை!


Spread the love
Exit mobile version