ITamilTv

இயந்திரங்களில் கோளாறு; வாக்குப்பதிவில் தாமதம்!

Spread the love

18 ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல் துவங்கி நடந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயங்கிரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரத்தில் வேர்க்கோடு பகுதியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

அதில், வாக்குச்சாவடி எண் 313 கொண்ட வாக்கு பதிவு மையத்தில் மின்னணு வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதால் வாக்காளர் நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காக காத்திருந்தனர். பின்னர், அதிகாரிகள் மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்ததை அடுத்து 45 நிமிடம் தாமதமாக வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதே போல கோவை, பொள்ளாச்சி மற்றும் வேறு சில மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சில வாக்கு சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு அங்கும் வாக்குப் பதிவு தாமதமாகியது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு (சித்தரிக்கப் பட்டது)

கோவை கணபதி மாநகராட்சி பள்ளியில் 285 எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சுமார் 50 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் 184-வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு எந்திரத்தில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது.

கோவை: காத்திருக்கும் வாக்காளர்கள்

இங்கு காலையிலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எந்திரம் பழுது காரணமாக அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர்.

மேலும், மேட்டூர் பூத் எண் 59ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரை மணி நேரமும், ஈச்சனாரி வாணி வித்யாலயா பள்ளி பூத் 181ல் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.


Spread the love
Exit mobile version