ITamilTv

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி.. ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Ponmudi becomes minister again

Spread the love

Ponmudi becomes minister again :

முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்,

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது..

இந்நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு :

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கடந்த 2011ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, அவரும் அவரது மனைவி விசாலாட்சியும் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 72 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை கடந்த 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை :

அதையடுத்து அண்மையில் இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1) இன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டால் வழக்கில் சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும்.

அதுமட்டுமல்லாமல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட சம்மந்தபட்டவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள்.

அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

அந்த வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால், பொன்முடி தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் உடனடியாக இழந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு :

இதனால் பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

மேலும் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் அமைச்சர் பதவி :

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை விதித்து பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்கிறார்.

தற்போது பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அமைச்சரகாவும் மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார்.

எனவே, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலையும் இணைத்து, நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழலில், நாளை காலை பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிகிறது Ponmudi becomes minister again.


Spread the love
Exit mobile version