ITamilTv

மணிப்பூர் விவகாரம் :பிரதமர் பதில் சொல்லணும்..குடியரசுத் தலைவருடன் ‘இந்தியா’ பரபரப்பு சந்திப்பு!!

Spread the love

மணிப்பூர் சென்று வந்த ‘இந்தியா’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21பேரும் கையொப்பமிட்டு இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து பின்வரும் கடிதத்தை வழங்கி உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரகாலமாக சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து சூழ்நிலை முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. பெண்கள் மீதான வன்கொடுமை காணொளி வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது, இந்த பேரவலத்தில் மாநில அரசு & காவல்துறையின் தோல்விக்கு சாட்சியாக இது அமைந்தது. இதில் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்வதற்கு இரண்டு மாத காலம் தாமதம் செய்தது நிலைமையை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல வன்முறைகளில் இந்த குறிப்பிட்ட சம்பவமும் ஒன்று என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பொறுப்புள்ள எதிர்கட்சியாக, கடந்த ஜூலை 29, 30 அன்று இந்தியா கூட்டணியின் சார்பில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து களநிலவரத்தை ஆய்வு செய்தோம். அங்கே பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் சந்திக்கும் துன்பங்களையும் மிகக்கொடுமையான சூழ்நிலையையும் அறிந்தோம். மணிப்பூர் ஆளுநரையும் சந்தித்து எமது அறிக்கையை சமர்ப்பித்தோம்.

அங்கே நடைபெற்ற வன்முறையின் விளைவாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 5000 க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டுள்ளன, 60000 மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து கவலைக்குரிய நிலையில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுராச்சந்த்பூர், மொய்ராங், இம்பால் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தோம். அங்கே மக்கள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறுகிறார்கள். அச்சம், பாதுகாப்பின்மை ஆகிய மனநிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் புனரமைப்பும் அவர்களின் வாழ்வை மீள்கட்டமைப்பு செய்வதற்கு தேவையானதாக இருக்கிறது.

மூன்று மாத காலமாக இனையவசதியை தடைசெய்திருப்பது பல்வேறு சமூகங்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது, வதந்திகள் பரவுவதற்கு ஏதுவாக இருக்கிறது. நீண்டகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடியிருப்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை பாதிக்கிறது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் பதிலளிக்க வேண்டும், விரிவான விவாதத்தை நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தொடர்ந்து இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதியான மேலவை எதிர்கட்சித் தலைவரை பேசவிடாமல் தடுப்பது அவையிலிருக்கும் பாரபட்சத்தைக்காட்டுகிறது, இடையிடையே அவரது ஒலிப்பெருக்கியை நிறுத்துவது நாடாளுமன்ற சனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது.

மேலும் தாமதிக்காமல் மணிப்பூரில் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கு தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும். கடந்த 92 நாட்களில் அங்கே நடைபெற்றுள்ள பாதிப்புகளை கணக்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு கடமையாற்ற வேண்டும்.

மணிப்பூரில் நிலவும் சூழ்நிலைக் குறித்து உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளித்திடவும் அதைத்தொடர்ந்து நீண்ட விரிவான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்திடவும் தாங்கள் வலியுறுத்திட வேண்டும் எனக் கோருகிறோம்.
மணிப்பூர் மக்களின் பாதிப்புகளை தணிப்பதற்கும் அங்கே இயல்புவாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் தங்களின் மேலான ஆதரவும் தலையீடும் மிகஅவசியமானது என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version