அதிமுக ஆட்சிக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் . உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் தன்னையே அர்ப்பணித்து உழைத்து வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது.
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”
என்ற வள்ளுவரின் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்.
Also Read : விடாது பெய்யும் கனமழை – உடனடி நடவடிக்கை எடுத்த அரசு..!!
கழக உடன்பிறப்புகளே, “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற வைர வரிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள்.
நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன்.
‘விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது” என்ற புரட்சித் தலைவரின் தத்துவ வரிகள் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வெற்றி நிச்சயம்; இதுவே நமது லட்சியம்” என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.