திருப்பூரை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யாவின் தற்கொலை, தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பல நூறு சவரன் நகை கொடுக்கப்பட்டு கவின் குமார் என்பவருடன் இவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆனால், திருமணமான 74 நாட்களில், வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தன்னால் கணவர் மற்றும அவரது வீட்டாரின் கொடுமைகளை தாங்க முடியவில்லை என்று தனது அப்பாவிற்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட்ஸ்களை அனுப்பி விட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் ரிதன்யா.

இதையடுத்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் திருப்பூர் இளம்பெண் ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே போல, ரிதன்யா தனது கடைசி வாய்ஸ் நோட்டில் தன் கணவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தன்னை கணவர் தனியாக விடுவதே இல்லை என்றும், கழிவறையில் கூட உள்ளே வந்து நின்று கொள்வதாகவும் தாயாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ரிதன்யாவின் தந்தை இந்த வழக்கை பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் சேர்க்க வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐஜியிடம் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.