Site icon ITamilTv

“தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெறுக” – அரசுக்கு வி.கே.சசிகலா வலியுறுத்தல்..

Spread the love

திமுக தலைமையிலான அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தியை நிறுத்தியிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது : .

சிறு குறு தொழில் நிறுவனங்களை அழிக்க துடிக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனம்.
அரசு, திமுக தலைமையிலான தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தியதன் விளைவாக, தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 400க்கும் அதிகமான ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள் இன்று முதல் உற்பத்தியை நிறுத்தியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. சிறு குறு தொழில் நிறுவனங்களை அழிக்க துடிக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இயங்கக்கூடிய நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் ஆலைகளான ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள் இன்றுமுதல் முழு உற்பத்தியையும் நிறுத்துவதாக அறிவித்து இருப்பது மிகவும் கவலையடையச் செய்கிறது.

ஏற்கனவே கடந்த ஓராண்டிற்கும் மேலாக கழிவு பஞ்சின் விலை உயர்வின் காரணமாக 40 முதல் 50 சதவிகித அளவுக்கு உற்பத்தி குறைக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக தலைமையிலான அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் இன்று முதல் நூறு சதவிகித நூல் உற்பத்தியையும் நிறுத்தக்கூடிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பத்து மாதங்களுக்கு முன்பாகத்தான் வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வரலாறு காணாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.6.35 என்று இருந்ததை ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டது. அதனை தற்போது ரூ.7.65 ஆக மீண்டும் உயர்த்தியுள்ளார்கள்.

அதிலும் சிறு குறு நிறுவனங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பீக் அவர்ஸ் கட்டணத்தை புதிதாக கொண்டுவந்து அவர்கள் மீது திணித்தது, நிலைக்கட்டணத்தை நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு உயர்த்தியது. தொழிற்சாலை இயங்கினாலும், இயங்காவிட்டாலும் நிலைக்கட்டணமாக மாதம் ரூ.17,200 கட்ட வேண்டிய நிலையில் தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு விழி பிதுங்கி நிற்கின்றன.

இது போன்ற காரணங்களால் சிறு குறு நிறுவனங்கள் தாங்கள் செய்துவந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் அத்தொழிலை விட்டு வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

திமுக தலைமையிலான அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல், நூல் உற்பத்தியாளர்கள் இன்று முதல் நூல் உற்பத்தியை நிறுத்தியதன் விளைவாக, நாளொன்றுக்கு சுமார் 1400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி தடைப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், இதன் காரணமாக நாளொன்றுக்கு சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடும். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் இதனால் பாதிப்படைவார்கள். அவர்களின் வாழ்வாதாரமே முற்றிலும் முடங்க போவதை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்.

இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதற்கு திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் மக்களின் நலனை துளியும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை மீண்டு எழமுடியாத வகையில் அதலபாதாளத்தில் தள்ளி விட்டுவிட்டு, வெற்று மேடை பேச்சுக்களை மட்டும் பேசிக்கொண்டு இருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

எனவே, திமுக தலைமையிலான அரசு சாமானிய தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version