அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்தின் அடிப்படையில் பணி நியமனங்களுக்கு பணம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும்,புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனாலும் அப்போதும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் , செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கும் குழு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜாமீன் கோரி தொடர்ந்த மனு நீதிபதி பீலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஜாமீன் கிடைக்காததால் அவர் 159 நாட்களாக புழல் சிறைக்குள் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும். அவருக்குள்ள இதய குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
குறிப்பாக உரிய நேரத்தில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பக்கவாதம் கூட ஏற்படலாம்’ என்று வாதிட்டு, செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த அறிக்கையில் எங்குமே, செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் அனுமதித்துதான் சிகிச்சை அளிக்க வேண்டுமென கூறப்படவில்லை’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.28-க்கு தள்ளிவைத்தனர்.