Site icon itamiltv.com

200+ இடங்கள் இலக்கு: விசிக கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்- dmk கலக்கம்!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில், தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டமன்ற தேர்தல் 2026

இந்த கூட்டம், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அமைப்புசார் மாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முதல் தீர்மானமாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றுவோம் என உறுதி எடுத்துள்ளது.

அடுத்து, கட்சியின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாவட்ட அடிப்படையை மாற்றி, சட்டமன்றத் தொகுதிகளை மையமாகக் கொண்டு 234 தொகுதிகளையும் தனித்தனி ‘தொகுதி மாவட்டங்கள்’ ஆக மாற்றியமைத்துள்ளனர்.

இது கட்சியின் அடிப்படை வலிமையை அதிகரிக்கவும், கிராமப்புறம் முதல் நகரம் வரை அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினருக்கும் கட்சி பொறுப்புகளில் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசிக கூட்டத்தில் தீர்மானம்

சர்வதேச அரசியல் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்து, அதை போர் குற்றமாக அறிவிக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த போர் காரணமாக உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு ஏற்பட்டு பொருளாதார பாதிப்பு அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணை பிரச்சினை காரணமாக இந்தியாவில் உருவாகும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இரட்டை இலக்கு சீட்

உள்நாட்டு விவகாரங்களில், தேர்தல் விதிமுறைகள் பெயரில் சிறு வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.

இறுதியாக, திமுக கூட்டணியில் விசிகக்கு கட்சியின் வலிமைக்கேற்ப இரட்டை இலக்க தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மாநிலங்களவையிலும் இடம் பெற வேண்டும் என்றும் இந்த உயர்நிலை குழு தீர்மானித்துள்ளது.

Exit mobile version