World

அமெரிக்கா–ஈரான் பேச்சு தோல்வி: கடும் நடவடிக்கைக்கு தயாராகும் வாஷிங்டன்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் தோல்வியடைந்துள்ளது.

சுமார் 21 மணி நேரம் நீடித்த ஆலோசனைகளுக்குப் பிறகும் முக்கிய விவகாரங்களில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கடந்த 8ஆம் தேதி இரு நாடுகளும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இதன் தொடர்ச்சியாக அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர் நிலை குழுக்கள் பங்கேற்றன.

பல கட்டங்களாக நடைபெற்ற 21 மணி நேர ஆலோசனைகளுக்குப் பிறகும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இரு நாடுகளின் பிரதிநிதிகளும் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர், ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து கவலை தெரிவித்தார்.

அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால் ஈரான் தரப்பில் உறுதியான உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதனால் பேச்சுவார்த்தை முடிவில்லாமல் முடிந்ததாக தெரிவித்தார்.

மறுபுறம் ஈரான் தரப்பு, சில விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் முக்கியமான மூன்று பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ளது.

ஈரானின் உரிமைகளை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் அரசு அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *