பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்ககோரி கிருஷ்ணகிரியை சேர்ந்த எட்டு பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்களான தங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்க கோரி கிருஷ்ணகிரியை சேர்ந்த முனியம்மா உள்ளிட்ட எட்டு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
அந்த மனுவில், திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற முழு தகுதி பெற்றிருந்தும் தங்களை பரிசீலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தொகை கோரி அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஐந்து முறை அரசுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தங்களுக்கு உதவி தொகை வழங்கிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மனுதாரர்களின் கோரிக்கை மே 4ஆம் தேதிக்கு பிறகு பரிசிலிக்கப்படும் என தெரிவித்தார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
