தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
பாபநாசம் தொகுதி ஐயூஎம்எல் எம்.எல்.ஏ. ஷாஜகான் மற்றும் திண்டிவனம் தொகுதி விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு ஆகியோருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃபு வாரியத் துறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வன்னி அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
புதிய இரண்டு அமைச்சர்கள் இணைந்ததன் மூலம், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆகவும், சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆகவும் உயர்ந்துள்ளது.
முதன்முறையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த வன்னி அரசு மற்றும் ஷாஜகான் தற்போது அமைச்சர்களாகவும் உயர்ந்துள்ளனர்.
