புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். விஜயை முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “செல்லப்பிள்ளை” என்று விமர்சித்த விசிக, தற்போது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், அந்த கட்சியை “ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளை” என மக்கள் பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி புதிய மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியாகவே தற்போது செயல்படுகிறது என்றார். தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளில் இருந்து அரசு பின்வாங்கி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இடமாற்றம் குறித்து பேசும்போது, “குதிரை பேரம் அல்ல, கழுதை பேரம் நடைபெறுகிறது” என்று விமர்சித்தார். தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர பிரதமர் மோடி அக்கறையுடன் செயல்படுகிறார் என்றும், அவருடன் முதல்வர் விஜய் நல்ல புரிதலுடன் செயல்பட வேண்டும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
