தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டு கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் புளியங்குளத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாலதி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சூரிய பிரகாஷ் என்பவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. காயமடைந்த சூரிய பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
