பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலில் ஏற்பட்ட சிறிய தொற்று காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னதாக, மருந்து ஒவ்வாமை ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், பின்னர் தேவையான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அளிக்கப்பட்டு,
சில நாட்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.
தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வலது காலில் ஏற்பட்ட லேசான கிருமி தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
2026 ஏப்ரல் 10ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், சிகிச்சைக்கு நல்ல பதில் கிடைத்ததால் 17ஆம் தேதி அவர் வீடு திரும்புகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது உடல்நிலை குறித்து அறிந்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
