கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த சித்தராமையா இன்று தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமாவிற்கு பிறகு தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் சித்தராமையா உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த நான், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இரண்டு முறை கர்நாடக முதலமைச்சராக உயர்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டமே தனது வளர்ச்சிக்கு காரணம் என்றும், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றியது தான் தனது வாழ்வின் மிகப்பெரிய திருப்தி என்றும் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், “மக்களே எனது கடவுள்” என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், சமூக நீதிக்கான தனது போராட்டம் தொடரும் என சித்தராமையா உறுதியாக தெரிவித்துள்ளார்.
