Tamilnadu

விஜய் வரவேற்பு கூட்டத்தில் அதிர்ச்சி: வேட்பாளர் திடீர் மயக்கம், நகை பறிப்பு!

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

பின்னர், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலையில் விஜய் ரோடு ஷோ நடத்தினார். குறிப்பாக சிட்ரா பகுதி முதல் கே.எம்.சி. மருத்துவமனை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ரசிகர்கள் திரண்டு நின்று அவரை காண ஆர்வம் காட்டினர்.

இந்த பெரும் கூட்டம் காரணமாக, விமான நிலையம் மற்றும் மருத்துவமனை நோக்கிச் சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

அதேபோல், கணியூர் சுங்கச்சாவடி அருகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

இந்த நிலையில், விஜய்யை பார்க்க வந்த ஒரு பெண்ணின் ஐந்து சவரன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வருத்தத்தில் அழுதார்.

பின்னர் காவல்துறையினர், அவரை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய தவெக சூலூர் வேட்பாளர் சுகுமாரன் மயக்கம் அடைந்தார். அவருக்கு உடனடியாக ஆதரவாளர்கள் முதலுதவி செய்தனர்.

இதேபோல், பெருமாநல்லூர் பகுதியில் விஜய்யை காண காத்திருந்த சில பெண்கள் உட்பட பலர் மயக்கம் அடைந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *