அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பதற்றம் குறைந்து, அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இரு நாடுகளும் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததால், பதற்றம் ஓரளவு தணிந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் அந்த முயற்சி எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை
. தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்ற நிலை உருவானது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் நகர்ந்து வருவதாகவும், விரைவில் அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும் என நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையும் வெளியிட்டார்.
மறுபுறம், அமெரிக்கா முன்வைத்த சில நிபந்தனைகளை ஈரான் ஏற்காததே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம் என அமெரிக்க தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு பதிலாக, இந்த நிலைக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டாளிகள் மீது தாக்குதல் மேற்கொண்டது.
இந்த சூழலில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் மூலம் இடைக்கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
