தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவை திரட்டுவதில் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக தவெக தலைவர் விஜய் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவத் தொடங்கின.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
அதே நேரத்தில், அதிமுக தரப்பில் இருந்து திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு தொடர்பான பேச்சு சென்றதாகவும், அதை திமுக நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியாக அமர்வதே திமுகவின் நிலைப்பாடு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
விஜய் ஆட்சிக்கு வந்தால் நீண்டகால அரசியல் மாற்றம் உருவாகலாம் என்பதால், திராவிடக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என திமுகவின் சில மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
