Tamilnadu

கட்சித் தாவல் சட்டம் அமலில் வரும் – இன்பதுரை எச்சரிக்கை!

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் அந்த எம்எல்ஏக்களின் பதவியே பறிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்றக் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை எந்த எம்எல்ஏவும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.

சிலர் தனி அணியாக செயல்படுகிறோம் அல்லது எங்களிடம் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்று கூறி தனியாக கொறடாவை நியமிக்க முடியாது என்றும் அவர் விளக்கினார். அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையே கொறடாவை நியமிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு தெளிவாக கூறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறினால் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *