அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்ய வேகமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.
பாஜகவுடன் ஒப்பந்தம் நெருங்குகிறதா?
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அனைத்து தொகுதிகளையும் இறுதி செய்து, தேர்தல் பிரசாரத்தில் முழு கவனம் செலுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் இறுதி ஆகவில்லை. இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த வாரத்தில் சென்னை வர வாய்ப்புள்ளதாகவும், எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
