Tamilnadu

மோடியின் முரட்டு அடிமை.. விளிம்பிற்குச் சென்றுள்ள ஈபிஎஸ் – உதயநிதி அட்டாக்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கண்ணனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான நேரடிப் போர் என வர்ணித்தார்.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் பாஜகவை, தமிழ்நாட்டு மக்களும் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின், அவரை “இந்தியாவிலேயே மோடியின் நம்பர் 1 முரட்டு அடிமை” என விமர்சித்தார்.

தனது விமர்சனத்தால் ஈபிஎஸ்-க்குக் கோபம் வருவதாகக் குறிப்பிட்ட அவர், பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் தமக்குக் கிடையாது என்றார்.

ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் எனத் தொடங்கி, தற்போது டெல்லியில் பிரதமர் மோடி வரை அனைவர் காலிலும் விழுந்து ஈபிஎஸ் அரசியல் செய்வதாகக் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்தார்

மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பிற்குச் சென்று என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருவதாகவும், அவருக்குச் ‘சுயமரியாதை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூடத் தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.

மக்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி எனத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளர் கண்ணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பொதுமக்களிடம் உற்சாகமாக வாக்குச் சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *