ITamilTv

ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய மார்ட்டின்…பா.ஜ.க.வுக்கா? திமுகவுக்கா?

Electoral Bonds

Spread the love

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வழிமுறைப்படி கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2018 ஜனவரி 29ஆம் அன்று அரசால் சட்டப்பூர்வமாக தேர்தல் பத்திரம்(Electoral Bonds) செயல்பாட்டுக்கு வந்தது. பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 10ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. 15நாட்கள் மட்டுமே ஆயுள் கொண்ட இந்த பத்திரங்களை, நிறுவனமோ, தனிநபரோ வாங்கி, தான் விரும்பிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சிக்கு மட்டுமே தங்களது அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடையாக அளிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம். தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், 15நாட்களுக்குள் அவற்றை தங்களின் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அந்த தொகை பிரதமரின் நிவாரண நிதிக்கு திருப்பி விடப்படும்.

மத்திய அரசின் தேர்தல் பத்திரம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பின. அரசியல் கட்சிகள் பல்வேறு தனியார் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றதாகவும், தங்களின் ஆதாயங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பல தேர்தல் பத்திரம் மூலம் ஆளும் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

  Electoral Bonds

இதையும் படிங்க: “என்னது, தேர்தல் பத்திர தரவுகளில் இதெல்லாம் இருக்காதா..?” – அதிர்ச்சி தரும் வங்கி வல்லுனர்!

அதிலும் மத்திய பா.ஜ.க அரசுக்கு பல்லாயிரம் கோடி நிதி அளிக்கப்பட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது. இந்தத் திட்டம் பணமோசடி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. மத்திய அரசின் தேர்தல் பத்திர திட்டம்(Electoral Bonds) அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றமே கருத்தும் தெரிவித்திருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பாக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பத்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும் வழக்கு ஒன்றின்படி, தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களில், “கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் நிதி வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தேர்தல் நிதி பெற்ற கட்சிகள் என்று எஸ்.பி.ஐ. வழங்கிய 2 பட்டியல்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் படி 11ஆயிரத்து 562 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 6ஆயிரத்து 566 கோடியும் காங்கிரஸுக்கு 1123 கோடி ரூபாயும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 1093 கோடி ரூபாயும், திமுகவுக்கு 617 கோடி மட்ற்றும் அதிமுகவுக்கு 6 கோடி ரூபாயும் தேர்தல் நிதி அளிக்கப்பட்டுள்ளது.எஸ்பிஐ தந்துள்ள பட்டியலில் ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை மட்டுமே தரவுகள் உள்ளது. மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான தரவுகள் இல்லை. அந்த கால கட்டத்தில் 2,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள்(Electoral Bonds) விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் கட்சிக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது லாட்டரி மார்ட்டின் தான். இவருக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனங்களின் பெயரில் 1368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ட்டினின் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கிய காலகட்டத்தில் அவர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ட்டின் தான் வாங்கிய தேர்தல் பத்திரங்களை தான் சார்ந்திருக்கும் திமுகவுக்கு வழங்கினாரா அல்லது, ரெய்டு நடத்தி மிரட்டிய பாஜகவுக்கு வழங்கினாரா என்னும் கேள்விகளும் காற்றி அலையடிக்கத் தொடங்கி இருக்கின்றன.


Spread the love
Exit mobile version