Site icon ITamilTv

தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிப்பு – ஈபிஎஸ் கண்டனம்

EPS Mango

EPS Mango

Spread the love

தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் கடமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ( EPS Mango ) தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் .

இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

தமிழ் நாட்டின் மாம்பழத் தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்வது சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளே ஆவார்கள். அதிலும் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, பீத்தர் உள்ளிட்ட 30 வகையான மாம்பழ ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் உலகப் புகழ் பெற்ற மாம்பழங்களாகும்.

இதில் தோத்தாப்புறி, அல்போன்சா வகை மாம்பழங்கள் மூலம் மா கூழ் தயாரிக்கப்பட்டு 62 வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியில் 75 சதவீதம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், ஏமன் போன்ற நாடுகளுக்கும்; 15 சதவீதம் ஐரோப்பா நாடுகளுக்கும்; 10 சதவீதம் சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு சுமார் 600 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைக்கிறது.

Also Read : சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யத் திட்டம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மா மரங்களில் 90 சதவீதம் மானாவாரி சாகுபடி – அதாவது மழைப் பொழிவையும், 10 சதவீதம் இறவை சாகுபடி – கிணறு மற்றும் நீர்நிலைகளையும் நம்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சுமார் 90 ஏரிகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 1160 ஏரிகளும், 57 ஆயிரத்து 500 கிணறுகளும் உள்ளன. விடியா திமுக அரசு பதவியேற்ற 3 ஆண்டுகளாக துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படாததால் கடந்த 2 ஆண்டுகளில் மழைக் காலத்தில் பெய்த மழைநீர் முழுமையாக சேமிக்கப்படவில்லை.

மேலும், இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் மழைப் பொழிவு இல்லாத நிலையில், 90 சதவீதம் ஏரிகளும், 70 சதவீதம் கிணறுகளும் வறண்டு போயுள்ளது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் 90 சதவீதம் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

மாமரங்களுக்கு போதிய தண்ணீர் இல்லையென்றால் கருகிவிடும் என்பதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், மா மரங்களுக்கு டிராக்டர் மூலம் நீர் ஊற்றி விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு ஏக்கர் மாமரம் பயிரிடப்பட்ட நிலத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச ஐந்து டிராக்டர் நீர் தேவைப்படுகிறது.

ஒரு டிராக்டர் நீர் ரூ. 300, ரூ. 500, ரூ. 700 வீதம் விற்கப்பட்டு வந்த நிலையில், வறட்சியின் காரணமாக இன்று ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ. 1,000/-ஆக உயர்ந்து, ஒரு முறைக்கு ரூ. 5,000/- வீதம், ஒரு ஏக்கருக்கு ஐந்து முறை தண்ணீர் பாய்ச்ச ரூ. 25,000/- வரை செலவு செய்து தண்ணீரை விலைக்கு வாங்கி மாமரங்கள் கருகாமல் பாதுகாத்து வருகின்றனர்.

மழை தொடர்ந்து பெய்யாததால், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், போதுமான தண்ணீர் இல்லாமல் ஆழ்துளை பாசனமும் முழு பலனைத் தரவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், எங்களிடம் குறைந்த விலைக்கும், வெளி மாநிலங்களில் மாம்பழங்களை அதிக விலைக்கும் வாங்கி வந்து, கிருஷ்ணகிரி மாம்பழம் என்று அதிக விலைக்கு விற்பதால், தாங்கள் பெரும் செலவு செய்து விளைவித்த மாம்பழங்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றும், தண்ணீருக்காக அதிகம் செலவழித்ததையும் கணக்கில்கொண்டு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் இந்த அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடும் வறட்சியின் காரணமாக மா மரங்கள் கருகிவிடாமல் காப்பாற்றுவதற்கு இந்த அரசு, அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ள மா மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மேலும் கோரிக்கை வைத்துள்ளனர்.

போதிய மழை இல்லாமல், குழந்தைகள் போல் பார்த்து, பார்த்து, தாங்கள் பயிரிட்டு, வளர்ந்து, பலன் தரவேண்டிய நேரத்தில், மா மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் வேதனையைப் போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும்.

ஏற்கெனவே, இப்பகுதி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இன்றுவரை விடியா திமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். ‘நானும் ஒரு டெல்டாகாரன்’ என்று தேர்தல் நேரத்தில் வசனம் பேசினால் மட்டும் போதாது.

விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரிகள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ( EPS Mrango ) ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என்று விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version