திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட விவகாரத்தில், பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவர், முன்னாள் பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார். மே 8ஆம் தேதி இரவு, வீட்டில் இருந்த மதுசூதனனை, இருசக்கரவாகனத்தில் வந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
ரத்தவெள்ளத்தில் மயங்கியவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: யூடியூப் சானல் நிர்வாகி கைது – சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பியவர்
இந்த பகீர் சம்பவம் குறித்து மதுசூதனனின் குடும்பத்தினர் அளித்த தகவலில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தரப்பட்ட பணத்தை பங்குபிரிப்பதில், திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் மற்றும் மதுசூதனன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் தூண்டுதலில், கூலிப்படையினர் மதுசூதனை வெட்டியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்தில் அரசன், விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன், கூட்டாளி சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜெகதீசன், சரவணன் ஆகியோர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மாவட்ட தலைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாஜக பொதுச் செயலாளர் செந்தில் அரசன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.