அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேச போவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி, கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை செங்கோட்டையன் வருகை தந்தார்.
பிரசார வாகனத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
சாலைகளின் இருபுறமும் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1972ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதே எங்கள் ஊரில் தான் கிளைக் கழகத்தை தொடங்கினோம்.
1975ல் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான குழுவில் என்னை பொருளாளராக நியமித்தனர். 1977ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எம்.ஜி.ஆர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.
சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு அறிவுறுத்திய போது நான் தயங்கினேன். அதற்கு, என் பெயரை போய் மக்களிடம் சொல் நீ வெற்றி பெறுவாய் என எம்.ஜி.ஆர் கூறினார்.
அவரது வழிகாட்டுதலின் பேரில் நாங்கள் கடினமாக உழைத்தோம். வெற்றி பெற்றோம்” என்று தெரிவித்தார்.