Tamilnadu

“பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்…” EPS-க்கு செங்கோட்டையன் விதித்த காலக்கெடு!

sengottayan

அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேச போவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படி, கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை செங்கோட்டையன் வருகை தந்தார்.

பிரசார வாகனத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

சாலைகளின் இருபுறமும் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்மாவின் மறைவுக்குப் பிறகு, எனக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. அப்போதும் கூட, இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். கட்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்தேன்.

2016 தேர்தலுக்குப் பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பல்வேறு சவால்களை சந்தித்தோம். வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம். ஆனால், கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் எடப்பாடி இல்லை.

கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா. தன்னை விமர்சித்த தலைவர்களை எல்லாம் அரவணைத்தவர் அம்மா.

பிரிந்து சென்றவர்களை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள், மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும். இல்லை என்றால், அந்த மனநிலையில் இருப்பவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, நாங்கள் எல்லாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும்.

எனது கோரிக்கையை பரிசீலித்தால் மட்டுமே, எடப்பாடியின் பரப்புரையில் பங்கு பெறுவேன். இதற்கு 10 நாள்கள் காலக்கெடு, அதற்குள் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *